×

குழந்தைகளை தாக்கும் அரியவகை நோய்களை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் கனிமொழி சோமு எம்பி வலியுறுத்தல்

சென்னை: திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சோமு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தார். அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குழந்தைகளை ரத்தம் உறையாத தன்மை குறைபாடு வெகுவாக பாதிக்கிறது.  முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இந்த அரியவகை நோய்களின் தீவிரத்தை உணர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், அரியவகை நோய்களுக்கான தேசிய அளவில் பிரத்யேகமாக ஒரு கொள்கையை மூன்று மாதங்களுக்குள் வகுக்கும்படி ஜனவரி 2021ல் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்தியாவில் சுமார் 7 கோடி பேர் இந்த மாதிரியான அரிய வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். உலக அளவில் அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 35 சதவீதத்தினர் ஒரு வயதுக்குள்ளாகவே மரணிக்கிறார்கள். அடுத்த 30 சதவீத குழந்தைகள் தங்களின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் முன்பே மரணத்தை தழுவுகிறார்கள். இந்தியாவிலும் இதே விகிதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது. குழந்தை பிறக்கும் முன்பே தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது, தகுந்த மருந்துகளை உட்கொள்வது. பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழந்தைகளின் ஆவணங்களை பரமரிப்பது என அரிய வகை நோய்களின் மீதான பொறுப்புகள் ஒன்றிய அரசுக்கு நிறையவே இருக்கிறது.

இதுபோன்ற அரியவகை நோய்களை எதிர்கொள்ள ஆஷாதாரா என்ற ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்று ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அத்துடன் மிகுந்த செலவுகளை ஏற்படுத்தும் இந்நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு தர வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன் பெறவும், அரசின் சுமையை குறைக்கவும், இந்நோய்க்கான சிகிச்சை அளிக்க ஆகும் செலவை எதிர்கொள்ள, கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சமூகப் பொறுப்பு நிதியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உரிய விதிமுறை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

Tags : Kanimozhi Somu ,Union ,Minister , Steps should be taken to prevent rare diseases affecting children early: Kanimozhi Somu MP urges Union Minister
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...